திமுக தலைவர் முக ஸ்டாலின் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளில் 10 நாட்கள் பரப்புரை பயணம் செய்கிறார்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக, அதிமுக, நாம் தமிழர்உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் நா. புகழேந்தி போட்டியிடுகிறார். திமுகவின் கூட்டணி கட்சியான தமிழக காங்கிரஸ் நாளை வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் 10 நாட்கள் சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணம் செய்கிறார் என்று அக்கட்சியின் தலைமை நேற்று அறிவித்துள்ளது. அதில், விக்கிரவாண்டி தொகுதியில் நா புகழேந்தியை ஆதரித்து அக்டோபர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் பரப்புரை பயணமும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அக்டோபர் 5 மற்றும் 6-ம் தேதிகளில் மு க ஸ்டாலின் முதற்கட்டமாக பரப்புரை மேற்கொள்கிறார்.
அதை தொடர்ந்து இரண்டாம் கட்ட பரப்புரையாக அக்டோபர் 12 13 14-ம் தேதி நாங்குநேரி தொகுதியிலும், இரண்டு நாள் இடைவெளி விட்டு பின் 17, 18, 19-ம் தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதிகளிலும் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்கிறார்.