காவிரி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு பகுதியில் அவ்வையார் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் சுப்பிரமணியன் என்பவரது மனைவியான லலிதா என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி திருச்சி மாவட்டத்திலுள்ள மேலசிந்தாமணி பகுதியில் இருக்கும் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் மூதாட்டியை மீட்டு விசாரணைக்காக மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் மூதாட்டியிடம் நடத்திய விசாரணையில் தனக்கு ஒரு பெண் இருக்கிறாள் என அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் முதுமை காலத்தில் ஆதரவளிக்க தனக்கு யாரும் இல்லாததால் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சென்னைக்கு செல்லும் படி அறிவுரை கூறி மூதாட்டியை காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் காவிரி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.