ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக வெடி வைத்து மீன் பிடித்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள திருப்பாலைக்குடியில் உள்ள கடல்பகுதியில் சிலர் சட்டவிரோதமாக வெடி வைத்து மீன் பிடிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் தேவிபட்டினம் கடற்கரை காவல்துறை இன்ஸ்பெக்டர் கனகராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், கணேச மூர்த்தி, தனிப்பிரிவு காவல்துறை அதிகாரி இளையராஜா ஆகியோர் அப்பகுதிக்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அப்போது மோர்பண்ணை கடற்கரையில் சந்தேகம்படும் படி படகு ஓன்று கடலில் இருந்து வேகமாக வந்து கடகரையோரமாக நிறுத்திவிட்டு உள்ளே இருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர். இதனைப்பார்த்த காவல்துறையினர் உடனடியாக வளைத்து பிடித்துள்ளனர். இதனையடுத்து படகில் சோதனை செய்ததில் வெடி பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து வெடி வைத்து மீன் பிடித்த குற்றத்திற்காக மோர்பண்ணையை சேர்ந்த ஆறுமுகம்(45), கோவிந்தராஜ்(31), கென்னடி(28) ஆகிய 3 பேரையும் கைது செய்து படகில் இருந்த 22 ஜெலட்டின், 5 டெட்டனேட்டர்கள், 2 அடி பீஸ் வயர் மற்றும் ஜி.பி.எஸ் கருவி ஆகிய பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வெடி பொருட்களை வழங்கிய புதுகுடியை சேர்ந்த கண்ணன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.