இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 19-ஆம் தேதி பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்த ஊரடங்கு தளர்வின் படி பொதுமக்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றுவது, முக கவசம் அணிவது, பொது இடங்களில் கூடுவது ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களும் இயல்பு நிலையை நோக்கி திரும்பத் தொடங்கினர். அதோடு மட்டுமில்லாமல் மதுபான விடுதிகளுக்கும் இரவு நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மருத்துவ நிபுணர்கள் இவ்வாறு முழுமையாக கட்டுப்பாடுகளை தளர்த்தினால் கொரோனா தொற்று மீண்டும் எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்திருந்தனர்.
மேலும் கொரோனா பாதிப்பும் கடந்த சில வாரங்களாக குறைய தொடங்கியதால் கட்டுப்பாடுகள் அங்கு முழுமையாக தளர்த்தப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், 31 ஆயிரத்து 117 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்நாட்டில் 58 லட்சமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் சிகிச்சையில் 11.83 லட்சம் பேர் உள்ளனர். இதற்கிடையே 85 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,29,515 ஆக அதிகரித்துள்ளது.