வழிப்பறி, கொலைமிரட்டலில் ஈடுபட்ட வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள கார்பெட் பகுதியில் ராஜசேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த ஆண்டு ராஜசேகர் மது குடித்துவிட்டு போதையில் அதே பகுதியில் வசிக்கும் சேட்டு என்பவரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கட்டையால் தாக்கியுள்ளார். இதனால் சேட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே சென்ற ராஜசேகர் கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டதால் அவரை மீண்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதே போன்று கல்யாணசுந்தரம் காலனியில் வசிக்கும் தீனதயாளன், சண்முகா நகரில் வசிக்கும் பிரகாஷ் மற்றும் மணியனூர் பகுதியில் வசிக்கும் வைத்தீஸ்வரன் ஆகியோரும் தொடர்ந்து கொள்ளை, வழிப்பறி மற்றும் கொலை மிரட்டல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் காவல் இன்ஸ்பெக்டர்கள் இணைந்து மாநகர போலீஸ் கமிஷனரான நஜ்முல் ஹோடா என்பவரிடம் ராஜசேக,ர் தீனதயாளன், வைத்தீஸ்வரன் மற்றும் பிரகாஷ் ஆகிய 4 பேரும் தொடர்ந்து கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல் இன்ஸ்பெக்டர்கள் அவர்கள் நான்கு பேரும் ஜாமீனில் வெளியே சென்றால் தொடர்ந்து இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவார்கள் என்பதால் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர். அந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா என்பவர் ராஜசேகர், வைத்தீஸ்வரன், பிரகாஷ் மற்றும் தீனதயாளனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் நகலை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் அதனை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.