குடும்ப வறுமை காரணமாக குழந்தைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஓட்டுனரான ராபின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக இந்த தம்பதிகள் தங்களது மூத்த பெண் குழந்தையை மோனிஷாவின் சகோதரியான பிரவீனா என்பவரின் பராமரிப்பில் விட்டுள்ளனர். இதனையடுத்து சட்டவிரோதமாக இந்த தம்பதியினர் திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் முகம்மது என்பவருக்கு இரண்டாவது பெண் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்துள்ளனர். அதன்பிறகு சேலம் மாவட்டத்தில் வசிக்கும் உமாமகேஸ்வரி என்பவருக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தையை கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் விற்கப்பட்ட இரண்டு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து குடும்ப வறுமை காரணமாக பணத்திற்காக குழந்தைகளை விற்றதை இந்த தம்பதியினர் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டனர். இதற்கு பரூக், கமல் என்ற இரண்டு ஓட்டுனர்கள் இடைத்தரகராக செயல்பட்டது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சட்டவிரோதமாக குழந்தைகளை பணத்திற்காக விற்பனை செய்த குற்றத்திற்காக ராபின், மோனிஷா, முகமது, உமாமகேஸ்வரி, பரூக், கமல் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.