பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலசிந்தாமணி பகுதியில் வசிக்கும் பக்ருதீன் என்பவரது வீட்டிற்கு அருகில் குப்பை கொட்டும் இடம் இருக்கின்றது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் குப்பை கொட்டும் இடத்தை சுத்தம் செய்வதற்காக துப்புரவு பணியாளர் ஒருவர் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடப்பதை பார்த்து அந்தப் பணியாளர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை குப்பையில் வீசி சென்ற தாய் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.