Categories
தேனி மாவட்ட செய்திகள்

இந்த கோவிலை அகற்ற வேண்டும்… நீதிமன்றம் அளித்த தீர்ப்பு… பொதுமக்களின் எதிர்ப்பால் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் கோவிலை அகற்ற வந்த அரசு அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சுப்புராஜ் நகர் புதுகாலனியில் சுமார் 30 ஆண்டுகள் பழமையான வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் குடும்பத்தினர் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். இதனையடுத்து அந்த கோவிலுக்கு அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர் இந்த கோவில் உள்ளது இடையூறாக இருப்பதாக கூறி மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணை நடத்தியதில் வீரகாளியம்மன் கோவிலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகராட்சி ஊழியர்கள் கோவிலை அகற்றுவதற்கு சென்றுள்ளனர். இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு வந்து எதிர்ப்பு தெரிவித்ததால் கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர். மேலும் 10 நாள் அவகாசம் நேற்று முடிந்த நிலையில் போடி நகராட்சி கமிஷ்னர் ஷகிலா,தாசில்தார் செந்தில் முருகன், போடி துணை சூப்பிரண்டு அதிகாரி முத்துக்குமார் ஆகியோரின் தலைமையில் காவல்துறையினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் வீரகாளிம்மன் கோவிலுக்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் கோவிலை அகற்ற முயன்றுள்ளனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து கோவிலை இடிக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்த 2 மாதத்திற்குள் கோவிலை வேறு இடத்தில் அமைக்கப்படும் என்றும், அதுவரை கோவிலை இடிக்கக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு அதிகாரிகள் ஒப்புக்கொண்ட பிறகே போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |