தண்ணீரில் மூழ்கிய 8 வயது சிறுமியை காப்பாற்றிய சிறுவனை மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
திருச்சி மாவட்டத்திலுள்ள வையம்பட்டி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு லித்திகா என்ற 8 வயது மகள் இருக்கின்றார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக தாய்-மகள் இருவரும் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டனர். இதனைப் பார்த்ததும் அதே பகுதியில் வசிக்கும் லோகித் என்ற 8 வயது சிறுவன் உடனடியாக கிணற்றுக்குள் குதித்து சிறுமியை பத்திரமாகக் காப்பாற்றி மேலே கொண்டுவந்து விட்டான். அதன்பின் உடனடியாக இந்த சிறுவன் அருகில் இருப்பவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணாவை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதற்குள் தண்ணீரில் மூழ்கி குணா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து காவல்துறையினர் குணாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு சிறுமியை துணிச்சலாக காப்பாற்றிய லோகேஷை அழைத்து ஐந்தாயிரம் ரூபாய் காசோலை வழங்கி பாராட்டியுள்ளார்.