சுரங்க ரயில் நிலைய வாசலில் அடையாளம் தெரியாத நபர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள லண்டனில் கேம்டன் டவுன் என்ற சுரங்க ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் யாரென்று அடையாளம் தெரியாத ஒரு நபர் தனக்கு தானே தீவைத்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்தத் தகவலின் பேரில் போலீசார், மருத்துவக்குழு, லண்டன் விமான ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறையினர் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீக்குளித்த நபரின் மீது எரிந்தத் தீயை அணைத்துள்ளனர்.
பின்பு தீக்குளித்த நபரை லண்டன் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவக்குழுவினரால் காப்பாற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து தீக்குளித்த நபரின் மீது மனநல சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். மேலும் அந்த நபர் தீக்குளித்த இடத்தின் அருகில் இருந்த பொதுமக்கள் யாருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் வந்துள்ளதால் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.