லாரியிலிருந்து வேனிற்கு கடத்த முயன்ற புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு டிரைவரை கைது செய்துள்ளனர்
சேலம் அம்மாபேட்டை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியில் சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியிலிருந்து மூட்டைகளை வேனிற்கு சிலர் ஏற்றுக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று இது என்ன மூட்டை என்று அவர்களிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவர்கள் இதில் ஒன்றும் இல்லை என்று கூறி அதனை வேகவேகமாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த மூட்டையை பிரித்துப் பார்த்தபோது அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அதற்குள் அங்கிருந்து சிலர் தப்பி சென்று விட்டனர். அதில் ஒருவரை மட்டும் காவல்துறையினர் பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் 72 மூட்டைகளில் இருந்த குட்கா பொருட்களையும், வேன் மற்றும் லாரியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திய குற்றத்திற்காக அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.