கட்டுப்பாட்டை இழந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஆனந்த் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சீலியூர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது தேங்காய் லோடு ஏற்றி சென்ற லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆனந்தின் வாகனம் மீது பலமாக மோதி விட்டது.
இதனால் ஆனந்த் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆனந்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.