தென்னை நாற்றுப்பண்ணையில் மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அரசு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகாவுக்கு உட்பட்ட எஸ்.வி மங்கலம் ஊராட்சியில் தென்னை நாற்றுப்பண்ணை வேளாண்மை துறையின் மூலம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்து அங்கு வளர்க்கப்படும் தென்னை ரகங்களை பார்வையிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது இந்த அரசு பண்ணையில் பயிரிடப்படும் தென்னங்கன்று இரகங்கள் வாரியாக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது எனவும் தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் 500 ஏக்கர் வரை தென்னங்கன்று நடவு செய்து பராமரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றி புதிய தென்னங்கன்றுகளை வைத்து பராமரிக்க ஒரு ஏக்கருக்கு 53,300 ரூபாய் வீதம் அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த ஒருங்கிணைந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன் பெறலாம் எனவும் கூறியுள்ளார். மேலும் தென்னை நாற்றங்கால் பண்ணையில் விவசாய மானிய திட்டத்தின் கீழ் விதைகள், உரங்கள், தென்னங்கன்று போன்றவற்றை விவசாயிகளுக்கு மானியமாக மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து காளாப்பூர் பகுதியில் சுதாகர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்ட நெல் சாகுபடி, தென்னை சாகுபடி, தேனீவளர்ப்புபெட்டி, கறவை மாடுகள் வளர்ப்பு உள்ளிட்டவற்றையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டுள்ளார். இந்த ஆய்வில் வேளாண்மை துணை இயக்குனர் பன்னீர்செல்வம், உதவி இயக்குனர் அம்சவேணி உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.