ஆஃப்கானிஸ்தானிலுள்ள ஐ.நா வளாகத்தின் மீது அரசுக்கு எதிரான மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல் போர் குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.நாவின் பொது செயலாளர் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருக்கும் ஹீரத் நகரில் ஐ.நா வளாகம் அமைந்துள்ளது. இந்நிலையில் திடீரென அரசுக்கு எதிரான சில மர்ம நபர்கள் ஐ.நா வளாகத்தின் மையப் பகுதியை குறிவைத்து ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள். மேலும் ஐ.நா அலுவலகத்தின் மீது துப்பாக்கி சூட்டையும் நடத்தியுள்ளார்கள்.
இவ்வாறு மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாவலர் ஒருவர் பலியாகியுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஐ.நா அதிகாரிகள் எவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து ஐ.நா பொது செயலாளரின் செய்தி தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஐ.நா வளாகத்தின் மீதும், அதில் பணிபுரிவோர் மீதும் தாக்குதல் நடத்துவது சர்வதேச விதிமுறைகளை மீறுவதாகும்.
மேலும் இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதலை போர் குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.நாவின் பொது செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. மேலும் இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் பொது செயலாளரான கட்டரஸ் தன்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.