கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஆஸ்திரேலியா தற்போது ராணுவம் மற்றும் ஹெலிகாப்டரை களத்தில் இறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பல நாடுகளில் சர்வதேச பயணங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா மட்டும் சொந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளிலிருந்து திரும்புவதற்கு குறிப்பிட்ட காலம் மட்டுமே அவகாசம் வழங்கியது. மேலும் எல்லைகளை மூடியதோடு பலரும் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற முடியாத அளவுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
இதன் காரணமாக பிரித்தானியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் சூழலில் தங்களது சுதந்திரம் பறிக்கப்பட்டதாக கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா மீண்டும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில் இராணுவம் மற்றும் ஹெலிகாப்டரை களத்தில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் ஆஸ்திரேலிய நிர்வாகம் அந்நாட்டு மக்கள் 2 டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாக எடுத்துக் கொள்ளும் வரை எல்லைகள் மூடப்பட்டு தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இதுவரை நாட்டில் மொத்தமாக 17 சதவீத மக்கள் தடுப்பூசியை முழுமையாக எடுத்துக்கொண்டனர். இதற்கிடையே சிட்னியில் 1300 காவல்துறையினர் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தை தடுக்கும் வகையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், சோதனை செய்து கொண்டவர்கள் ஆகியோரை நேரடியாக சென்று உறுதிப்படுத்தும் பணியில் சுமார் 300 ஆயுததாரிகள் அல்லாத இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டு வரும் கடும் கட்டுப்பாடுகளை பல நாட்டினரும் பாராட்டி வருகின்றனர். மேலும் ஆஸ்திரேலியாவில் இதுவரை 34 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் அதில் ஆயிரம் பேர் மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.