பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்த ஒரு சில நாடுகளுக்கு இஸ்ரேல் நிறுவனம் தடை விதித்துள்ளது .
இஸ்ரேலின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான என்எஸ்ஓ அமைப்பின் உளவு மென்பொருளான பெகாசஸ் மூலம் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் , பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் என்எஸ்ஓ அமைப்பு தனது உளவு மென்பொருளை பயன்படுத்த பல்வேறு நாடுகளுக்கு தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரான பென்னி கன்ட்ஸ் உறுதியளித்திருந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை முதல் என்எஸ்ஓ அமைப்பிடம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் இதுதொடர்பான விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் என்எஸ்ஓ தனது உளவு மென்பொருளை பயன்படுத்துவதற்கு பல்வேறு நாடுகளில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இதுகுறித்து என்எஸ்ஓ ஊழியர் ஒருவர் கூறும்போது ,”ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் எந்த நிறுவனம் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் ஈடுபட்டது என்பதை அடையாளம் கண்டு அந்த நிறுவனத்திற்கு தடை விதிக்கப்படும். இதனால் சில அரசு நிறுவனங்களில் இந்த உளவு மென்பொருளை பயன்படுத்துவதற்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது .அத்துடன் எந்த நாடு , எந்த நிறுவனம் போன்ற விவரங்களை தற்போதைக்கு வெளியிட முடியாது “,என்று அவர் கூறினார். இதற்கிடையே இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘டெல் அவிவ் அருகே உள்ள ஹெர்ஸ்லியா என்ற பகுதியில் என்எஸ்ஓ அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த புதன்கிழமை சோதனை நடத்தினர் ‘,என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மெர்குரி பொது விவகார நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது. அத்துடன் என்எஸ்ஓ அமைப்பைப் பற்றி ஊடகங்களில் வெளியாகியுள்ள இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்பதை இந்த புலனாய்வு முடிவுகள் உறுதிப்படுத்திவிடும். அதோடு இந்த மென்பொருளை 40 நாடுகளில் உள்ள புலனாய்வு, சட்ட அமலாக்க அமைப்புகள் மற்றும் ராணுவம் உள்பட 60 துறைகள் பயன்படுத்துகின்றன,’என்று அந்த அறிக்கையிக் தெரிவிக்கப்பட்டுள்ளது .