அமெரிக்காவில் லட்சக்கணக்கானோர் வீடுகள் இல்லாமல் வாழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் அமெரிக்க அரசு வாடகை செலுத்த முடியாமல் தவித்து வரும் அமெரிக்கர்களை வீட்டை விட்டு வெளியேற்ற பதினோரு மாதங்களுக்கு தடை விதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மேலும் அமெரிக்க அரசு பில்லியன் டாலர்களை வாடகை செலுத்த முடியாமல் தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் வீட்டு வாடகை செலுத்துவதற்காக ஒதுக்கியிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அந்த நிதியை பயன்படுத்துவதற்கு தடை விதித்தது.
மேலும் அமெரிக்காவில் வாடகை செலுத்த முடியாத நிலையில் வசித்து வரும் மக்களை பதினோரு மாதங்களுக்கு வீட்டை விட்டு வெளியேற்ற கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடையானது இன்றுடன் முடிவடைவதால் அமெரிக்கர்கள் லட்சக்கணக்கானோர் வீடற்றவர்களாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்திடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாடகை வீட்டில் வசித்து வரும் மக்களை வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த தடை உத்தரவை அக்டோபர் மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என்று கூறி பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால் அதற்கு குடியரசு கட்சி உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும் பிரதிநிதிகள் சபையும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இடதுசாரி ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் விடிய விடிய போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் “மற்ற உறுப்பினர்களையும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அழைப்பு விடுக்கும் வகையில் நேற்று நாடாளுமன்றத்தின் வெளியில்தான் விடிய விடிய தூங்கினோம்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் கோரி புஷ் கூறியுள்ளார்.