கிராம உதவியாளரை தாக்கிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில் கிராமத்தில் கிராம உதவியாளராக பெரியசாமி என்பவர் இருந்து வருகின்றார். இந்நிலையில் பெரியசாமி அப்பகுதியில் நடக்கும் மணல் கடத்தல் பற்றி அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து பெரியசாமி ஆவுடையார் கோவில் அருகே சென்றபோது மர்ம நபர்கள் 3 பேர் அவரை வழிமறித்து ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதன்பின் மர்ம நபர்கள் பெரியசாமியை மணல் கடத்தல் பற்றி அதிகாரிகளுக்கு ஏன் தெரிவித்தாய் என கூறி தரையில் உப்பைகொட்டி அதன் மீது முட்டி போடவைத்து சரமாரியாக அவரை தாக்கியுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து தப்பித்த பெரியசாமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனையடுத்து ஆவுடையார் கோவில் கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் கிராம உதவியாளரை தாக்கிய மர்ம கும்பலை கைது செய்ய கோரி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட சங்க தலைவரான வேதசெல்வம் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் கிராம உதவியாளரை தாக்கிய மர்ம கும்பலை கைது செய்யுமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மர்மநபர்களை வலைவீசி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.