புதிதாக ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கும் படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மே 10 முதல் விண்ணப்பித்த மூன்று லட்சம் பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு விட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் 4 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு ரேஷன் அட்டை அச்சிடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு மத்தியில் புதிய ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பிப்பவர்களிடம் வழங்கல் அதிகாரிகள் மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
கொரோனா நிவாரண பொருட்களை வாங்க தவறியவர்களுக்கு ஜூலை 1 முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்ததையடுத்து புதிய ரேஷன் அட்டைக்கு பலரும் விண்ணப்பிக்க தொடங்கினர். இதை பயன்படுத்திய வழங்கல் அதிகாரிகள் உறவினர்கள், தெரிந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தும் மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்த நிலையில் புதிய குடும்ப அட்டை வழங்குவது முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு வழங்கல் அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.