மதுரையில், கர்னல் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்த இடத்தை இடித்து, அங்கு கருணாநிதி நுாலகம் கட்டினால், அ.தி.மு.க., போராட்டம் நடத்தும்’ என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர் அறிவித்துள்ளனர். அவர்களின் கூட்டறிக்கை, தன் சொந்தப் பணத்தை செலவு செய்து, முல்லை பெரியாறு அணையை உருவாக்கி, தமிழக தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்தவர் பென்னிகுயிக். அவரது நினைவு இல்லத்தை இடித்து விட்டு, கருணாநிதி நுாலகம் அமைக்க, தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு வரலாற்றை அழித்து, இன்னொரு வரலாற்றை உருவாக்க நினைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
எனவே, பென்னி குயிக் நினைவு இல்லத்தை இடித்துவிட்டு, அங்கு கருணாநிதியின் பெயரில் நுாலகம் அமைக்கும் முடிவு, சரித்திரத்தை சிதைப்பதற்கு சமம். யாருக்கும் ஆட்சேபனை இல்லாத இடத்தில், கருணாநிதி நுாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் எதிர்ப்பை மீறி, பென்னிகுயிக் நினைவு இல்லத்தில் கருணாநிதி நுாலகம் அமைக்கப்படுமானால், அ.தி.மு.க., போராட்டத்தில் குதிக்கும்.இவ்வாறு ஓ.பி.எஸ்., – இ.பி.எஸ்., கூறியுள்ளனர்.இதேபோல, ‘மதுரையில், கருணாநிதி நினைவு நுாலகம் அமைக்க, பென்னிகுயிக் வாழ்ந்த இல்லத்தை இடிக்கக்கூடாது’ என, பா.ம.க., நிறுவனர் ராமதாசும் தெரிவித்து உள்ளார்.