கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதிய விபத்தில் கடைக்காரர் பலியாகி 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் முத்து வேல்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் காய்கறி மற்றும் டீக்கடையை வைத்து நடத்தி வந்துள்ளார்.இவருக்கு ஆவுடை ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்துவேல் குமார் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி கோவிலில் பொங்கல் வைப்பதற்காக குடும்பம், உறவினர்கள் மற்றும் கடையில் வேலை பார்ப்பவர்களை அழைத்துக்கொண்டு உறவினர் மற்றும் மனைவியை வேனில் அனுப்பி வைத்துவிட்டு இவரும் அப்பகுதியில் வசிக்கும் சிலருடன் இணைந்து காரில் சென்றுள்ளார்.
அந்த காரை முத்துவேல் குமார் ஓட்டிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது முத்துவேல் குமார் ஓட்டி சென்ற காரானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று அப்பகுதியில் உள்ள புளிய மரத்தில் மோதி விட்டது. இந்த விபத்தில் முத்துவேல் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதில் சென்ற மற்ற ஆறு பேரும் படுகாயம் அடைந்து உயிருக்காக போராடிக் கொண்டிருந்தனர்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் இறந்த முத்துவேல்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.