சரக்கு ரயில் பெட்டி தடம் புரண்டு 2 மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்கு அரிசி, பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களை சரக்கு ரயில்கள் மூலம் வெளி மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படுகிறது. இதற்காக சரக்கு ரயில்களை நிறுத்தி பொருள்களை இறக்குவதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 2 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சரக்கு ரயில்கள் நிறுத்தப்பட்டு அதில் உள்ள அரிசி மூட்டைகளை லாரியின் மூலம் ஏற்றி அதன்பின் குடோன்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் ஆந்திராவிலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் புறப்பட்டது.
அதன்பின் சரக்கு ரயிலானது நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்தவுடன் கடைசி பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு இறங்கி தடம் புரண்டது. இதனை சுதாரித்துக் கொண்ட என்ஜின் டிரைவர் ரயிலை உடனடியாக நிறுத்தினார். ஆனால் தண்டவாளத்தை விட்டு இறங்கிய ரயில் பெட்டி ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் அவை சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர் சேதமடைந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் அப்புறப்படுத்தியுள்ளனர்.
ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேற்பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து தடம் புரண்ட பெட்டியை தண்டவாளத்தில் ஏற்றி நிறுத்துவதற்கு திருவனந்தபுரத்திலிருந்து மீட்பு எந்திரம் வரவழைக்கப்பட்டு பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் தடம் புரண்ட பிளாட்பாரங்களில் எந்த ரயிலும் நிறுத்தப்படாததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.