ஈரான் நாடு தான் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு முழு பொறுப்பு என்று பிரித்தானியா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
பிரித்தானிய வெளியுறவு செயலர் டொமினிக் ராப் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு ஓமன் கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் மீது நடந்த ட்ரோன் தாக்குதல் திட்டமிடப்பட்ட செயல் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த ட்ரோன் தாக்குதலில் பிரித்தானியவை சேர்ந்த ஒருவரும், ருமேனிய நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் ஈரான் இந்த குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்துவிட்டது.
இந்த விவகாரத்தில் இஸ்ரேல் தலையிட்டு எழுப்பிய கேள்விகளுக்கு பிரித்தானிய வெளிவிவகார செயலர் டொமினிக் ராப் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் சட்டவிரோத மற்றும் கொடூரமான தாக்குதல்கள் ஓமன் கடற்பகுதியில் வணிக கப்பல் மீது நடத்தப்பட்டதற்கு இங்கிலாந்து கடும் கண்டனத்தை தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் இந்த தாக்குதல்கள் இலக்கு வைத்து வேண்டுமென்றே நடத்தப்பட்டதாகவும், ஈரான் சர்வதேச சட்டத்தை மீறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற தாக்குதல்களை ஈரான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.