மனைவியை கணவன் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் பகுதியில் வேளாங்கண்ணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மதலையம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வேளாங்கண்ணி மதலையம்மாளுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவரின் இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில் வேளாங்கண்ணியின் இரண்டாவது மனைவி அவருடன் சேர்ந்து வாழாமல் தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து வேளாங்கண்ணி முதல் மனைவியான மதலையம்மாளுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் மதலையம்மாள் வேளாங்கண்ணியை அரிவாளால் காலில் வெட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வேளாங்கண்ணி மதலையம்மாளின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அதன்பின் மதலையம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேளாங்கண்ணியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.