சரக்கு வேன் கவிழ்ந்ததால் அடுத்தடுத்து 5 வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக் கொண்டு சரக்கு வேன் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்நிலையில் சரக்கு வேன் மேலுமலை அடுத்துள்ள தனியார் கல்லூரி அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விட்டது. அப்போது கிருஷ்ணகிரி நோக்கி வேகமாக சென்ற லாரி முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு வாகனங்கள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் மொத்தம் 5 வாகனங்கள் சேதம் அடைந்துவிட்டது.
இதனையடுத்து படுகாயமடைந்த மூன்று பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.