ரியல் எஸ்டேட் அதிபருக்கு சொந்தமான வாகனங்கள் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மேடவாக்கம் பகுதியில் கௌதம் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் கௌதம் தனது வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கௌதம் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் கௌதமிற்கு சொந்தமான 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 4 கார்கள் எரிந்து நாசமாகி விட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்கள் கௌதமின் வாகனத்திற்கு தீ வைத்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.