மது குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் கூலி தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை பகுதியில் பீட்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது வின்சென்ட் என்பவர் குடிப்பதற்கு பணம் தருமாறு பீட்டரை வற்புறுத்தியுள்ளார். ஆனால் பீட்டர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த வின்சென்ட் கீழே உடைந்து கிடந்த ட்யூப் லைட்டை எடுத்து பீட்டரின் கழுத்தில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பீட்டரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வின்சென்டை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.