பாக்.,பிரதமர் இம்ரான் கான் ஐ.நா.வில் உரையாற்றியபோது , பிரதமர் மோடியை இந்திய குடியரசுத் தலைவர் என தவறாக பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று ஐக்கிய நாடுகள் சபையில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது, அவர் பேசியதில் பெரும்பங்காக இந்தியாவுக்கு எதிராகவே பேசினார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து மையமாக வைத்து தாக்கியே பேசினார். ஒவ்வொருவருக்கும் 15 முதல் 20 நிமிடம் ஐநாவில் பேச ஒதுக்கப்படும்.
ஆனால் பாக் பிரதமரோ, அவருக்கென ஒதுக்கப்பட்ட நிமிடங்களை விட அதிகமாக 50 நிமிடத்திற்கு மேலாக உரையாற்றினார். இந்த உரையின் போது இந்தியப் பிரதமர் என சொல்வதற்கு பதிலாக தவறுதலாக மோடியை இந்திய குடியரசுத் தலைவர் மோடி என தவறாகக் குறிப்பிட்டது சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது.
ஏற்கெனவே இம்ரான் கான் ஈரானில் ஒருமுறை பேசிய போது , ஜெர்மனி – பிரான்ஸ் எல்லைப் பகுதி எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக, ஜெர்மனி- ஜப்பான் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றது என பேசியதால் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனத்துக்குள்ளானார். தற்போது மீண்டும் இந்தியாவின் பிரதமரை, குடியரசுத் தலைவர் மோடி எனக் கூறியதால் இம்ரான்கான் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது.