பிரசவம் முடிந்த சில மணி நேரத்திலேயே இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் இசக்கி ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பிரசவத்திற்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனாவிற்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து இரவு 8 மணி அளவில் திடீரென மீனா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனாவின் கணவர் மற்றும் உறவினர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் தான் மீனா இறந்ததாக கூறி மகப்பேறு வார்டு முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.