திருப்பூர் பட்டாம்பூச்சி ஆசிரியர்கள் குழுவினரின் பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பாராட்டு விழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி சம்பந்தப்பட்ட ஓவியங்களை பட்டாம்பூச்சி ஆசிரியர் குழுவினர் வரைந்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்கள் கல்வி சார்ந்த ஓவியங்களை கண்ணைக் கவரும் வகையிலும், மாணவர்களுக்கு கல்வியை கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் பள்ளியின் சுற்று சுவர்களில் வரைந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா விழிப்புணர்வு குறித்த வாசகங்களையும் பள்ளியின் சுற்றுச் சுவர்களில் எழுதியுள்ளனர்.
மேலும் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் அடிப்படையில் கல்வி சார் ஓவியங்களை படங்களாக வரைவதன் மூலம் மாணவர்களிடையே ஒரு நல்ல மனநிலையை உருவாக்க முடியும் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பட்டாம்பூச்சி ஆசிரியர் குழுவினரின் பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவி சுமதி செழியன் தலைமையில் நடைபெற்றது. மேலும் உடுமலை வட்டார கல்வி அலுவலர்கள் பிரிட்டோ, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பட்டாம்பூச்சி ஆசிரியர் குழுவினரின் பணியை பாராட்டி பேசி நினைவு பரிசுகளை வழங்கியுள்ளனர்.