பிரித்தானியாவில் பயன்பாட்டில் இருக்கும் NHS-ன் கோவிட்-19 செயலியை மக்கள் அழித்து விட வேண்டாம் என்று அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானிய மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் NHS-ன் கோவிட்-19 செயலி மூலம் அந்நாட்டு அரசாங்கம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு எச்சரித்து வந்தது. அதாவது பிரித்தானியாவில் இந்த செயலியின் மூலம் மக்கள் யாரெல்லாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், யாருக்கு கொரோனா தொற்று உள்ளது என்பதை எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.
அதேசமயம் இன்று யாருக்கேனும் தொற்று உறுதி செய்யப்பட்டால் கடைசியா ஐந்து நாட்களுக்கு முன்பு அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில் மக்கள் பலரும் இந்த திட்டத்தால் தங்களின் வேலை, சுற்றுலா திட்டம் உள்ளிட்டவை கெடுவதோடு, அவர்களுக்கு தொற்று இல்லை என்பதற்கான முடிவுகள் வந்தாலும் கூட தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இதனால் இந்த செயலியை பிரித்தானிய மக்கள் தங்களது செல்போன்களிலிருந்து அழிக்க ஆரம்பித்து விட்டனர். இவ்வாறு மக்கள் செயலியை தவிர்த்து வந்தால் கொரோனா பாதிப்பு குறித்த உண்மையான நிலவரத்தை அந்நாட்டு அரசாங்கத்தால் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியாது என்ற காரணத்தினால் புதிய விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா தொற்று யாருக்கேனும் உறுதி செய்யப்பட்டால் அவர்களுடன் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு எச்சரிக்கை மெசேஜ் வரும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ஐந்து நாட்களுக்கு முன்பு தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளது. எனவே மக்கள் அனைவரும் உயிர் காக்கும் செயலியாக நம்பப்படும் NHS-ன் கோவிட்-19-ஐ தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.