அமெரிக்கா ஆப்கன் மக்களை தலிபான்களிடமிருந்து மீட்கும் வகையில் அமெரிக்காவில் மீள்குடியேற்றம் திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியுள்ள நிலையில் தலிபான்களின் ஆதிக்கம் அந்நாட்டில் அதிகரித்து வருவதோடு, தலிபான்கள் பல முக்கியமான பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க படையினருக்கு சுமார் இருபது ஆண்டு கால போரில் உதவியாக இருந்த ஆப்கன் குடிமக்கள் தற்போது தலிபான்களின் ஆதிக்கத்தால் அபாய நிலையில் உள்ளனர்.
இதையடுத்து அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் அமெரிக்காவில் மீள்குடியேற்றம் செய்யும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சுமார் இரண்டாயிரம் பேர் முதல் கட்டமாக இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை அன்று 221 பேர் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அந்நாட்டு அரசு அவர்களை அகதிகள் என்ற அந்தஸ்துடன் அமெரிக்காவில் தங்கி இருக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் அதிகமானோர் தூதரக அதிகாரிகள் மற்றும் அமெரிக்க படையினருக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்கா இந்த திட்டத்தை பயனாளர்களை அதிகரிக்கும் வகையில் விரிவுபடுத்தியுள்ளது.
அந்த வகையில் செய்தி நிறுவனங்களில் முன்னாள் மற்றும் தற்போதைய ஊழியர்கள், அமெரிக்க நிதி உதவியை பெற்ற பிற நிவாரண குழுக்களில் பணியாற்றியவர்கள், அமெரிக்காவை சேர்ந்த தொண்டு நிறுவனத்தில் பணியாற்றியவர்களை உள்ளடக்கியதாக இந்த திட்டத்தை அமெரிக்கா விரிவுபடுத்தியுள்ளது. சுமார் 20,000 ஆப்கன் மக்கள் அமெரிக்காவின் மீள் குடியேற்ற சட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.