பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த வாரம் சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்தபோது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவருடன் காரில் வந்து ஐதராபாத்தை சேர்ந்த அவரது பெண் தோழி வள்ளி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஆண் நண்பர்கள் இருவரும், யாஷிகாவும் காயத்துடன் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிவேகப் பயணம் தான் விபத்துக்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய பிறந்த நாளையொட்டி யாரும் தனக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளார். மேலும் பவானியின் மரணத்தால் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடனேயே இருப்பேன். பவானி என்னை மன்னிக்க மாட்டாள். பவானியின் குடும்பம் ஒரு நாள் என்னை மன்னிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.