ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சுய தொழில் தொடங்குபவர்களுக்கு கடனுதவி வழங்க தகுதியுள்ள நபர்களை தேர்தெடுக்கும் நேர்காணல் நடைபெற்றுள்ளது.
கொரோனா தொற்றினால் பலரும் வாழ்வாதாரம் இழந்து மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலைவாய்ப்பு இல்லாத ஆதி திராவிட இளைஞர்கள் சுயதொழில் தொடங்க வாய்ப்பு அளிக்கும் வகையிலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் மாவட்ட தாட்கோ அலுவலகத்தின் சார்பில் அரசின் மானியத்துடன் தொழில் முனைவோர் திட்டம், வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவை செயல்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து இந்த திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்குவதற்காக 141 பேர் கடனுதவி பெற விண்ணப்பித்து இருந்துள்ளனர்.
அதன் அடிப்படையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்திரகலா தலைமையில் கனனுதவி வழங்க தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த நேர்காணலில் விண்ணப்பித்த 141 பேரில் இருந்து 96 பேர் பங்கேற்ற நிலையில் அவர்களின் தனித்திறன், சுய தொழில் திட்ட வரைவு மற்றும் கல்வி தகுதி போன்றவைகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பரிசீலனை செய்து தகுதி உள்ளவர்களுக்கு மானியத்துடன் கடன் உதவி செய்து தரப்படும் என தெரிவித்துள்ளனர்.