உதவி செய்வதற்காக சென்ற நபரை 4 பேர் அடித்து பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் இருக்கும் ஒரு சொகுசு ஹோட்டலில் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் செந்தில்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தனது குடும்பம் கஷ்டத்தில் இருப்பதாகவும், பண உதவி செய்யுமாறும் அந்தப்பெண் செந்தில்குமாரிடம் கேட்டுள்ளார். இதனால் அந்த பெண்ணிற்கு உதவி செய்ய நினைத்த செந்தில்குமார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து திடீரென அங்கு சென்ற 4 பேர் பெண்ணை காரில் ஏற்றி அனுப்பி விட்டு செந்தில்குமாரை நிர்வாணமாக்கியுள்ளனர். அதன்பிறகு செந்தில் குமாரை வீடியோ எடுத்த அந்த மர்ம நபர்கள் கத்தி, கட்டை போன்ற ஆயுதங்களால் அவரை பலமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதன் பிறகு அவரிடம் இருந்த 13 ஆயிரம் ரூபாய் பணம், 15 பவுன் தங்க நகை போன்றவற்றை மர்ம நபர்கள் பறித்துள்ளனர். இதனை தொடர்ந்து செந்தில்குமாரின் கண்ணை கட்டி காரில் ஏற்றி முடிச்சூர் பகுதியில் அவரை கீழே தள்ளி விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து சென்றனர்.
இதுகுறித்து செந்தில்குமார் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செந்தில் குமாரை ஏமாற்றுவதற்காக வீட்டிற்கு வரவழைத்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய சரவணன், அஜித் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். அதோடு தப்பி ஓடிய மற்ற குற்றவாளிகள் காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.