சீன நாட்டின் வூஹான் நகரில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன நாட்டில் உள்ள வூஹான் நகர், உலகம் முழுக்க பிரபலம். ஏனெனில் அங்கு தான் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாத இறுதியில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்பு நாடு முழுவதும் பரவ தொடங்கியது. அதனைத் தொடர்ந்து உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவியது. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.
அப்போது சீனா தங்கள் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தியது. அதன்பின்பு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. எனவே பல்வேறு நாடுகளில் கொரோனா குறைந்து, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.
இந்நிலையில், சீனாவின் வூஹான் நகரத்தில், மீண்டும் ஒரு வருடம் கழித்து கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே வூஹான் நகரில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.