கரூர் அருகே பொன்னுசாமி என்பவரும், அவரது மனைவி பழனியம்மாளும் வசித்து வருகின்றனர். பழனியம்மாளுக்கு 55 வயது ஆகின்றது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 70 வயதான மணி என்பவருக்கும் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஒருமாதம் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பழனியம்மாவிடம் பேசுவதற்காக, அதிகாலை 4 மணிக்கு மணி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது பழனியம்மாள் பேச மறுத்த காரணத்தினால் ஆத்திரமடைந்த மணி, அங்கு இருந்த அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். இதையடுத்து பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் மணி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அருகிலிருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் அனுப்பினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட அரிவாளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.