தேனி மாவட்டத்தில் ஆட்டோவில் கஞ்சா கடத்தி சென்ற பெண்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலூர் எள்ளுக்காட்டுப்பறை பகுதியில் அதிகளவில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று கூடலூர் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லோயர்கேம்ப்-காஞ்சிமரத்துறை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது ஆட்டோவில் கூடலூரை சேர்ந்த சிவகாமன்(35), மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஈஸ்வரி(44), உலகத்தேவர் தெருவை சேர்ந்த சுகப்பிரியா(35) மற்றும் குபேந்திரன்(48) ஆகிய 4 பேர் இருந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த மூட்டையை சோதனை செய்ததில் 12 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த நிலையில் 12 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.