நேர்த்திக்கடன் செலுத்த சென்ற வாலிபர் ராட்சச கிரேனில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எட்றபள்ளி கிராமத்தில் இருக்கும் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சின்ன கொத்தூர் கிராமத்தில் ஆகாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 3 பேருடன் இணைந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக முதுகில் அலகு குத்திக்கொண்டு ராட்சச கிரேனில் 40 அடி உயரத்தில் தொங்கியவாறு கோவிலுக்கு சென்றுள்ளார்.
இதனை அடுத்து மேட்டுப்பாளையம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 40 அடி உயரத்திலிருந்து ஆகாஷ் கீழே விழுந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் ஆகாஷ் உயிர் தப்பிவிட்டார். அதன்பிறகு மற்ற 3 பேரும் கீழே இறங்கி வேண்டுதலை நிறைவேற்றி உள்ளனர். இச்சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.