மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் இரண்டாவது கணவருடன் இணைந்து தாய் தனது மகனை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் சார்லஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரோசாரியா, ஜான் பீட்டர் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சார்லஸ் இறந்துவிட்டதால் ராஜேந்திரன் என்பவரை இந்திரா இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரோசாரியா அடிக்கடி தனது தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
அப்போது இந்திரா தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் கோபமடைந்த ரோசாரியா கீழே கிடந்த கோடாரியை எடுத்து தனது தாயை தாக்க முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து கோபமடைந்த இந்திரா, ராஜேந்திரனுடன் இணைந்து கோடாரியால் தனது மகனை சரமாரியாக அடித்து உள்ளார். இதனால் படுகாயமடைந்த ரோசாரியோ அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார். அதன்பிறகு இந்திராவும், ராஜேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் படுகாயமடைந்த ரோசாரியாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்திரா மற்றும் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.