மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளையான வாலிபர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள கீரிப்பட்டி பகுதியில் கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சர்வேஷ் கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சர்வேஷ் கிருஷ்ணனுக்கு, ராசி நகர் பகுதியில் வசிக்கும் சூரியகலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சர்வேஷ் கிருஷ்ணன் ஆத்தூரிலிருந்து வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் தண்டவராயபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி ஒன்று திடீரென இவரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் சர்வேஷ்கிருஷ்ணன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனைப் பார்த்த டிரைவர் அதிர்ச்சியடைந்து லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிச் சென்று விட்டார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சர்வேஷ் கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.