நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வார ஏலத்தில் 55 லட்சம் வரை பருத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வைத்து பருத்தி ஏலம் நடைபெறும். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு நாமக்கல் நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், புதுசத்திரம், வெளக்கவுண்டம்பட்டி, எருமப்பட்டி, சேந்தமங்கலம், பவித்திரம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் சுமார் 2,000 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து திருப்பூர், திண்டுக்கல், சேலம், தேனி, கோவை, அவினாசி, கொங்கணாபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து போட்டிபோட்டு பருத்தியை வாங்கி சென்றுள்ளனர். இந்நிலையில் டி.சி.எச்.ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 7,900 ரூபாய் முதல் 9,999 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது, இதனைத்தொடர்ந்து ஆர்.சி.எச் ரக பருத்தி குறைந்தபட்சமாக 6,899 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 8,141 ரூபாய்க்கும் விற்கப்பட்ட நிலையில் கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 4,199 ரூபாயில் இருந்து 5,599 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.