3 தொகுதி இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக இருக்கும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக, தமிழ்நாடு காங்கிரஸ், நாம் தமிழர், என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்றுடன் (30ஆம் தேதி) வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.
இந்நிலையில் வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்றது. இதில் 3 தொகுதி இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ், நாம்தமிழர், என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. நாங்குநேரி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், நாம்தமிழர் வேட்பாளர்கள் உட்பட 46 வேட்பு மனுக்களில் 24 மனுக்கள் ஏற்கப்பட்டு 22 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியிலும் அதிமுக, திமுக நாம்தமிழர் வேட்பாளர்கள் உள்ளிட்டோரின் 15 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு நிலையில் 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் என் ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட 18 வேட்பு மனுக்களில் 11 மனுக்கள் ஏற்கப்பட்டு 07 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெற 3 ஆம் தேதி கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.