தபால் நிலையம் முன்பு தாய் தனது 2 குழந்தைகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் சாம்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இவர் ஒரு பட்டதாரி. இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திசையன்விளை தபால் நிலையத்திற்கு புஷ்பா தனது குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்வதற்காக அவர்களை அழைத்துக்கொண்டு பல முறை வந்துள்ளார். ஆனால் தபால் நிலைய ஊழியர்கள் அவர்கள் வரும் போதெல்லாம் இன்று பதிவு செய்பவர்களுக்கு டோக்கன் வழங்கி விட்டோம். எனவே மறுநாள் காலையில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தபால் நிலையத்திற்கு வரும்படி கூறியுள்ளனர்.
இதனையடுத்து புஷ்பா மறுநாள் காலையில் தனது குழந்தைகளுடன் சென்றபோது தபால் நிலைய ஊழியர்கள் டோக்கன் ஏற்கனவே வழங்கி விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த புஷ்பா தபால் நிலையம் முன்பு தனது 2 குழந்தைகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்ய ஏற்பாடு செய்தனர். அதன் பின் புஷ்பாவின் குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்யப்பட்டது.