தொட்டியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி குழந்தை பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் தனசேகரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய ஜோஸ் துரை என்ற குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா குழந்தையை தனது பெற்றோரிடம் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அப்பகுதியில் அமைந்துள்ள காய்கறி கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்பகுதியில் விளையாடி கொண்டிருந்த குழந்தையான ஜோஸ்துரை அங்கு உள்ள தரை மட்ட நீர் தேக்கத் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து ஐஸ்வர்யா வீட்டிற்கு சென்று விளையாடிக்கொண்டிருந்த தனது மகனை தேடியபோது குழந்தையை காணவில்லை.
அப்போது ஐஸ்வர்யா வீட்டின் முன்பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ஜோஸ்துரை தொட்டியில் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து தொட்டியில் கிடந்த குழந்தையை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று குழந்தையான ஜோஸ்துரையின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.