வழிப்பறி திருட்டு போன்றவற்றை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வழிப்பறி நடப்பதாக காவல்துறையினருக்கு புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பரமக்குடி பகுதியில் உள்ள காளிதாஸ் தெருவில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் 2 இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து தங்க சங்கிலியை பறித்து சென்றது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் சாலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக நடந்து செல்ல அச்சமடைந்துள்ளனர். இதனைதொடர்ந்து பல்வேறு இடங்களில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமராக்கள் சரியாக செயல்படாமல் இருப்பதால் திருடர்களை பிடிப்பதற்கு காவல்துறையினர் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அனைத்து பகுதிகளிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.