அதிமுக முன்னாள் அமைச்சரும், அவைத் தலைவருமான மதுசூதனன் நேற்று உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 80. கடந்த சில நாட்களாகவே மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உடல்நிலை மிகவும் மோசமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மதுசூதனனின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் , அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி , சசிகலா உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பாகுபாடின்றி வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் சென்னையில் மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் இறுதி ஊர்வலத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் கலந்து கொண்டனர். தண்டையார் பேட்டையில் இருந்து மூலக்கொத்தளம் மின் மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மதுசூதனனின் உடல் தகனம் செய்யப்பட்டது.