100 நாள் வேலை பணியாளர்களுக்கு உரிய வருமானம் அளிக்கததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி தொகுதியில் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கனாங்குப்பம் ஊராட்சியில் அமைந்திருக்கும் திருவாபாளையம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மாதத்தில் இருபது நாட்கள் மட்டுமே பணி வழங்குவதாகவும் மற்றும் அப்படி வழங்கப்படும் பணிக்கு உரிய கூலி தொகையை வழங்குவதில்லை எனவும் தெரியவந்துள்ளது. இதுபற்றி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வாணியம்பாடி-திம்மாம்பேட்டை சாலையில் திக்குவாய் பாளையம் பேருந்து நிலையத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் தங்களின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றுள்ளனர். மேலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சாலைமறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.