சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள ஸ்ரீதேவி கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராக செல்வகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கருனை கரங்கள் மற்றும் மதர் தெரசா பெயரின் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியை கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகின்றார். அதில் ஆதரவற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய 170 குழந்தைகளை சேர்த்து பாதுகாத்து வருகின்றார்.
இந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கில் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களுக்குச் சென்று அங்கு பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையம் போன்ற மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் அமர்ந்து பொதுமக்களின் காலணிகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார். அதன் மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதையும் பள்ளி குழந்தைகளின் நலனுக்கு செலவு செய்கிறார்.இது குறித்து அவர், “நான் காலணிகளை துடைக்கிறேன். நீங்கள் குழந்தைகளின் கண்ணீரைத் துடையுங்கள்” என்று கூறியுள்ளார்.