பிரிட்டனில் ஒன்றரை வயது குழந்தையை வீட்டில் தனியாக அடைத்து வைத்து 6 நாட்களாக பட்டினி போட்டுவிட்டு பார்ட்டிக்கு சென்ற தாய்க்கு 9 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் வசிக்கும் Verphy Kudi(19) என்ற இளம்பெண் தன் ஒன்றரை வயது குழந்தை, Asiah-வை வீட்டில் தனியாக அடைத்து வைத்து விட்டு, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்று லண்டனில் தன் காதலருடன் பிறந்தநாள் கொண்டாட சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் குழந்தை பசியால் துடித்து தாயை தேடி வீட்டிற்குள் அலைந்து கொண்டிருந்துள்ளது.
அதன்பின்பு, டிசம்பர் 7ஆம் தேதியன்று Elephant and Castle-ல் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும் டிசம்பர் 9-ல் கோவென்ட்ரியில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அனைத்தையும் முடித்துவிட்டு சாதாரணமாக டிசம்பர் 11-ஆம் தேதி அன்று மாலையில் வீடு திரும்பியுள்ளார்.
வீட்டில், குழந்தை பசியால் துடித்து அழுது உயிரிழந்து கிடந்துள்ளது. அதன் பின்பு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். மருத்துவர்கள் குழந்தை இறந்ததாக தெரிவித்தனர். குழந்தை பசியால் துடித்து கதறியழுது காய்ச்சல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்துள்ளது.
அதன்பின் Verphy கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிற்கான தீர்ப்பு நேற்று வெளியானது. அதில், சிறிதும் பொறுப்புணர்வு இன்றி தன் சுய மகிழ்ச்சிக்காக, அனைத்திற்கும் தாயையே நம்பியிருக்கும் பச்சிளம் குழந்தையை, இரக்கமின்றி கொலை செய்ததால் Verphy-க்கு ஒன்பது வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.